தொழில்முறை நிர்வாக ஆலோசகரான டாக்டர் ஆர்.கார்த்திகேயன், வணிகம் மற்றும் நிர்வாகம் குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களைப் பற்றிய தெளிவான அறிமுகத்தை ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் தொடர்ந்து தமிழில் கட்டுரைகளாக கவனப்படுத்தினார். அந்தக் கட்டுரைகளோடு இன்னும் பல கட்டுரைகளைச் சேர்த்து வெளிவந்திருப்பதே ‘வணிக நூலகம்' என்னும் இந்த நூல்.
வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இவரின் எழுத்தாற்றலின் பலமே, சுருக்கச்சொல்லி விளங்கவைப்பதுதான்.
புகழ் பெற்ற வணிக நிறுவனங்களின் முதலாளிகள் முதல், மிகவும் சிறிய அளவில் ‘ஸ்டார்ட் அப்' நிறுவனத்தைத் தொடங்கி, அதை அசுர வளர்ச்சிக்குக் கொண்டு சென்றவர்கள் வரை பலர் எழுதிய புத்தகங்களை அதன் சிறப்புகளை, அவர்கள் கடந்துவந்த சோதனைகளை நம் கண்முன் இந்நூல் தரிசனப்படுத்துகிறது. துவண்டிருக்கும் மனத்தில் புதிய தெம்பையும் நம்பிக்கையையும் விதைக்கின்றன நூலாசிரியரின் இதமான சொல்லாடல்.